சென்னை: நீட் தேர்விற்கு நான் எப்போதும் தடை கொடுக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என் ரவி கூறியதற்கு ஸ்ரீபெருமபத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் இன்று (ஆகஸ்ட். 12) ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அதில் மாணவரின் தந்தை ஒருவர் நீட் தேர்விற்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள் என கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்விற்கு நான் எப்போதும் தடை கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் நீட் தேர்வானது பொது பட்டியலில் உள்ளதால் குடியரசு தலைவரிடம் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்விற்காக கோச்சிங் சென்டர் சென்று படிக்க வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிக் கூடங்களில் பாடம் நடத்தும் போதே மாணவர்களை நீட் தேர்விற்கு தயார் செய்யலாம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மாணவர்கள் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும் என கூரினார்.
நீட் தேர்விற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வு இல்லாத காலத்தை ஒப்பிட்டு பார்க்கையில் நீட் தேர்விற்கு பின்னரே அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வுக்கு 7.5% இடஒதுக்கீடு கொடுத்த பின்னரே 600 மாணவர்கள் மருத்துவர்களாயினர். அதுமட்டுமின்றி கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வின் தொடர்பாக எந்த தற்கொலையும் நடைபெறவில்லை என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு கட்சி தலைவர்கள் 10 லட்சம், 20 லட்சம் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதனால் அரசியல்வாதிகளின் அரசியலுக்கு மாணவர்கள் பலியானார்கள். மேலும் நீட் தொடர்பான தவறான புரிதலை கைவிட வேண்டும். நீட் தேர்வானது மாணவர்களை போட்டி திறன் கொண்டவர்களாக உருவாக்குகிறது என கூறினார்.