கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22ஆம் தேதி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உலகம் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரதமர் மோடியின் வேண்டுகோளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தேவையில்லாமல் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநராக நான் விடுக்கும் வேண்டுகோளில், 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் வெளியிடங்களில் கூட வேண்டாம். அவர்கள் தங்கள் வீட்டினை விட்டு வெளியே வரவேண்டாம். இது குறித்த விழிப்புணர்வினை இளைஞர்கள் தன்னார்வ அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.