சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் அருகே தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சென்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 75 பேர் கையில் கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆளுநர் வாகனத்தில் சென்ற பின் கொடிகளை வீசியுள்ளனர். உடனே காவல்துறை அனைவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். ஆளுநர் கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில் அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை வீசி எறிந்தனர் என்று தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.