'7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல்; தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி!' - ஆளுநர் ஒப்புதல்
சென்னை: 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் ஒப்புதல் தாமதமாவதைச் சுட்டிக்காட்டி, உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நான் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கோரி, கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினமே, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது.
ஒப்புதலுக்கு அனுப்பி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையிலும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த நிலையில், ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் இதுகுறித்து ஆளுநருக்கு தொடர்ந்து கடிதம் எழுதியும் நேரில் சந்தித்தும் பேசினர்.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசாணையை நேற்று (அக்.29) தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இன்று (அக்.30) மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
ஆளுநரின் இந்த ஒப்புதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நன்றி தெரிவிக்கும் வகையில் செய்தியறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு நீண்ட தாமதத்திற்கு பிறகு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்களிடையே நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி பயிலும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், சட்டப்பேரவையில் செப்டம்பர் 15-ஆம் தேதி கொண்டு வரப்பட்டு, அதே நாளில் நிறைவேற்றப்பட்டது.
அந்த சட்டத்திற்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தால் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களிடம் தேவையற்ற பதற்றமும், தவிப்பும் ஏற்பட்டிருக்காது.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டம் குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதற்கு 29.10.2020 அன்று பதில் வந்ததையடுத்து ஒப்புதல் அளித்து இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
7.5 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று ஆளுநர் நினைத்திருந்தால், அதை ஒரு சில நாட்களில் நடத்தி முடித்திருக்கலாம். 46 நாட்கள் தாமதப்படுத்தியிருக்கத் தேவையில்லை.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கரோனா அச்சம் காரணமாக ஏற்கனவே தாமதம் ஆகி வந்த நிலையில், சூழலை உணர்ந்தும், மக்களின் மன ஓட்டத்தை அறிந்தும் ஆளுநர் விரைவாக செயல்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்திருக்கலாம்.
7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் ஒப்புதல் தாமதமாவதை சுட்டிக்காட்டி, உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நான் தான்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் அழுத்தத்திற்கு பிறகே இந்த விஷயத்தில் பிற கட்சிகளும் குரல் கொடுக்கத் தொடங்கின. நிறைவாக, கால தாமதம் ஆனாலும் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இட ஒதுக்கீட்டுக்காக முதன் முதலில் குரல் கொடுத்த கட்சி என்ற வகையில் பாட்டாளி மக்கள் கட்சி மிகுந்த மகிழ்ச்சியடைகிறது; பெருமிதம் கொள்கிறது.
7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைத்து விட்ட நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைமுறைகளை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.