சென்னை: உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிச.25) கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின்கிறிஸ்துமஸ் வாழ்த்து: "கிறிஸ்துமஸ் திருநாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், தொண்டு மற்றும் தியாகத்தின் செய்தியை நினைவுகூர்ந்து, மனிதக்குல சேவைக்காக நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம்"
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கிறிஸ்துமஸ் வாழ்த்து:"கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை. நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். என்பன போன்ற தனி மனிதரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர்! அவர் பிறந்த திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 அன்று உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
கிறித்தவ சமயத்தைப் பரப்பிடத் தமிழ்நாடு வந்த தொண்டர்கள் பலர். அவர்களுள் தமிழ்மொழி மீது கொண்ட பற்றால், 'தமிழ் மாணவன்' என்று தம் கல்லறையில் எழுதச் செய்த அறிஞர் ஜி.யு.போப், தமிழ் செம்மொழி எனப் பறைசாற்றிய அறிஞர் கால்டுவெல், சதுர் அகராதி தந்து, 'தமிழ் அகராதியின் தந்தை' எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் முதலான சான்றோர்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் வியக்கத்தக்கவை. தமிழக அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: "கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்"