சென்னை:மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச்சந்தித்த அவர், ''2022-23ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்காக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மொத்தம் 87ஆயிரத்து 764 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில், துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுநர் பட்டபடிப்பு, மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிப்ளமோ செவிலியர் படிப்பு, டிப்ளமோ ஆப்டோமெட்ரி படிப்பு, பாராமெடிக்கல் டிப்ளமோ/சான்றிதழ் படிப்புகள் ஆகிய மேற்கண்ட படிப்புகளுக்கு 121 அரசு கல்லூரிகளில் 2ஆயிரத்து 526 இடங்களுக்கும், 348 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான 15ஆயிரத்து 307 இடங்களுக்கு விண்ணப்பங்களும், சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (பொதுபிரிவு) 58ஆயிரத்து 980 ஆகும். அதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் 535ஆகவும், நிராகரிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 304ஆகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 58ஆயிரத்து 141 ஆக உள்ளது. அதில், ஆண்லைன் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 15ஆயிரத்து 064 ஆகவும், பெண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 43ஆயிரத்து 077 ஆகவும் இருக்கிறது.
மருந்தாளுநர் பட்டயப்படிப்புகளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (பொதுப்பிரிவு) 5ஆயிரத்து 271 ஆகும். அதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் 25 ஆகவும், நிராகரிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 40 ஆகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 5ஆயிரத்து 206ஆகவும் உள்ளது. அதில் ஆண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 1561 ஆகவும், பெண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 3ஆயிரத்து 645ஆகவும் உள்ளது.