தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவிலிருந்து மீண்டவர்களைப் பாதிக்கும் புதிய நோய்: மருந்தின் இருப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை - etv news

மியூகோர்மைகோசிஸ் நோயைக் கட்டுப்படுத்த 'அம்ஃபோடெரிசின் பி' மருந்தின் இருப்பை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

Mucormycosis
‘மியூகோர்மைகோசிஸ்’ நோய்

By

Published : May 12, 2021, 4:46 PM IST

கரோனா தொற்றால் நாட்டின் பல்வேறு பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய கரோனா மருந்துகளின் விநியோகத்தை அதிகரிக்கவும், சமமான, வெளிப்படையான முறையில் அவற்றை மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்கும், மத்திய அரசு தொடர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களைப் பாதிக்கும் 'மியூகோர்மைகோசிஸ்’ என்ற கறுப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் 'அம்ஃபோடெரிசின் பி' என்ற மருந்தின் தேவை, ஒரு சில மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எனவே, இந்த மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அதன் தயாரிப்பு நிறுவனங்களுடன் மத்திய அரசு இணைந்துள்ளது. இந்த மருந்தின் இறக்குமதியை அதிகரித்து, உள்நாட்டில் அதன் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் அதன் விநியோகத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்தின் இருப்பு, தேவை தொடர்பாக உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதால், மே 10 முதல் 31 வரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தேவைக்கேற்ப இம்மருந்து விநியோகம் செய்யப்படவுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகள், சுகாதார முகமைகளுக்கு இந்த மருந்தை சமமாக விநியோகிக்குமாறு மத்திய அரசிடம் மாநிலங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

மாநிலங்களுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகளை நேர்மையான முறையில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துகளின் விநியோக நடவடிக்கைகளை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'தன்னுயிர் கருதாது மண்ணுயிர் காக்கும் செவிலித்தாய்களை வாழ்த்துகிறேன்' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details