தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து நெரிசலை எவ்வாறு குறைக்கலாம்? - public transport policy

சென்னை: போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாண அரசு பொதுப் போக்குவரத்து முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று பேராசிரியர் மாதவ் பதாமி யோசனை வழங்கியுள்ளார்.

Government should promote public transport policy says Madhav Badami
Government should promote public transport policy says Madhav Badami

By

Published : Jan 2, 2020, 3:22 PM IST

சென்னை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் சார்பாக நகரப் பகுதியில் பொதுப் போக்குவரத்து முறைகளிலுள்ள பிரச்னைகள் குறித்தும் இதனை களைய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் நகர திட்டமிடல் ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான மாதவ் பதாமி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் "வாகனப்பெருக்கம், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாண அரசுப் பொதுப் போக்குவரத்து முறையை ஊக்குவிக்க வேண்டும். பேருந்துகளைத் தாண்டி மக்கள் சைக்கிளில் செல்வது, நடந்து செல்வது ஆகியவற்றை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

இந்திய நகரங்களில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், குடியிருப்புப் பகுதிகளில் அருகருகே இருப்பது நமக்கு இயற்கையாக அமைந்த சாதகமான அம்சம்.

இதனால், பணிக்காக மேற்கொள்ளப்படும் பயணங்களில் 45 விழுக்காடு ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்குள்ளே உள்ளது. 15 விழுக்காடு பயணங்கள் ஐந்து முதல் 10 கிலோமீட்டர் தூரம்வரை மேற்கொள்ளப்படுகிறது. இதற்குமேல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.

இதனால் அரசு சைக்கிள், நடைபயணத்தை ஊக்குவிக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது மெட்ரோ, புறநகர், எம்.ஆர்.டி.எஸ். உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் அதனை அணுகும் வகையில் இருக்க வேண்டும்.

உரையாற்றும் பேராசிரியர் மாதவ் பதாமி

உதாரணமாக அவர்கள் சாலையைக் கடக்க வசதியில்லை, தடுப்புச் சுவரின் மீது ஏறிச்செல்ல வேண்டிய சூழல் உள்ளது, அல்லது எதிரில் இருக்கும் இடத்திற்குச் செல்ல நீண்டதூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. கோடிக்கணக்கான பணம் செலவழித்து அவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. மக்கள் நடந்துசெல்லும் பாதை பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது.

பெருநகரங்களில் தற்போது உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, அரசு கொள்கை ரீதியாக திட்டமிட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான சாலை வசதி, சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளைக் கொண்ட பாரத் ஸ்டேஜ் நடைமுறைகள் ஆகியவற்றுடன் நகரெங்கும் வாகனத்தை நிறுத்தும்போது பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது, பாதசாரிகளுக்கு உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்துவது, பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

அதனைவிடுத்து அதிக முதலீடுகளைக் கொண்டு மெட்ரோ ரயில்களை இயக்குவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகள் நிதியைத் திட்டமிட்டுச் செலவிட வேண்டும். எளிமையான, பலனளிக்கக்கூடிய திட்டங்களை விட்டுவிட்டு அதிக செலவு ஏற்படுத்தும், அதிநவீன தொழில்நுட்பங்களை நாம் செயல்படுத்திவருகிறோம். மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் என்கிறார்கள், ஆனால் வாகனத்திலிருந்து வெளிவரும் காற்று மாசு குறைவானதுதான்.

அனல்மின் நிலையத்திலிருந்து வரும் மாசை மின் வாகனங்கள் கட்டுப்படுத்துமா? வாகன அதிகரிப்பால் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. தரமான சாலைகள் இல்லாதது, உரிய நேரத்தில் மருத்துவ உதவி வழங்கப்படாதது ஆகிய காரணங்களால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான். இது அவர்களது குடும்பத்திற்கு மீள முடியாத பாதிப்பைத் தருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றி மட்டும் கவலை கொள்கின்றனர், ஆனால் அதனால் படுகாயமடைந்தவர்களைப் பற்றி நாம் பேசுவதில்லை. இதுபோன்ற விபத்தால் பலரது குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைகின்றன" என்றார்.

இதையும் படிங்க: சாலையில் நடந்துசென்ற யானைகளால் வாகன நெரிசல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details