தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர்கள் விதிகளின் படி, கிராம நிர்வாக அலுவலர்கள், தாங்கள் பணிபுரியும் கிராமங்களிலேயே கட்டாயம் வசிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த உயர் நீதிமன்றமும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமங்களில் வசிக்காவிட்டால், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விதிகளை மறு ஆய்வு செய்யக் கோரி ஆர்.சுதா, எஸ்.சசிகலா ஆகிய பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மாதவிடாய், குடும்பம் மற்றும் கல்வி போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், பணிபுரியும் கிராமங்களில் அல்லாமல் சுற்றுச்சூழல் மற்றும் கழிப்பிடம் போன்ற இதர அடிப்படை வசதிகள் நிறைந்த மிக அருகில் உள்ள கிராமங்களில் வசிக்க கிராம நிர்வாக அலுவலர்களை அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, பிறப்பு, இறப்பு உள்ளிட்ட பலதரப்பட்ட பணிகளை காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்களின் பணி அரசு நிர்வாகத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவே தங்களது நடைமுறை சிக்கல்களைக் கூறி மனுதாரர்கள் அரசுக்கு மனு அளித்தால், அதை தமிழ்நாடு அரசு சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் மீதான வரிஏய்ப்பு வழக்குக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்!