சென்னை: தமிழ்நாடு பிஷப் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் அந்தோனிசாமி தலைமையில் தமிழ்நாடு மாநிலக் கல்வி கொள்கை உருவாக்கும் குழுவின் தலைவர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி முருகேசனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைகளான சமயச்சார்பின்மை, சனநாயகம், சமத்துவம், நீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம், பன்முகத்தன்மை இவற்றின் அடிப்படைகளைக் கொண்டே தமிழ்நாடு கல்விக்கொள்கை அமைய வேண்டும். இனவாதம், மதவாதம், தேசியவாதம் இவை போன்ற குறுகிய தளங்களில் கல்வி வேர் கொள்ள இயலாது.
வணிகமாயமாகும் கல்வி:நாடெங்கும் கல்வி விரைந்தும், பரந்தும் தனியார்மயமாகி வருவதால், அது முற்றிலும் வணிகமயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பொதுக் கல்வி முறை என்ற கட்டணமில்லாக் கல்வி அமைப்பை மீட்டெடுக்கவும், வலுப்படுத்தவும் வேண்டியது அரசின் கடமையாகும். இலவச மற்றும் பொதுக் கல்வி அமைப்பை வலிமைப்படுத்தாமல், எந்தக் கல்வியும் தமிழ்நாட்டில் செழுமை பெற இயலாது.
தற்பொழுது வசதிப்படைத்தோருக்கு ஐந்து நட்சத்திரக் கல்வி நிறுவனங்களும், வறுமைப்பட்டவர்களுக்கு குறைந்தப்பட்ச வசதிகளும் இல்லாத கல்வி நிறுவனங்களும் உள்ளன. பாடத்திட்டங்களும் மாறுபடுகின்றன. எனவே மாணவர்களுக்கு சமவாய்ப்பு இல்லாத சூழலில் உயர்கல்வி பெறுவதற்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுவது விசித்திரமாக இருக்கிறது. அதே நேரத்தில், பள்ளிக்கல்வியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வியில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். உயர்கல்வியில் சேர்வதற்கு எத்தகைய நுழைவுத் தேர்வும் தவிர்க்கப்பட வேண்டும்.
தனியார் பயிற்சி மையங்கள் தடை செய்ய வேண்டும்: வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகள் தவிர, அனைத்து நிலைகளிலும் தனியார் பயிற்சி நிலையங்கள் தடைசெய்யப்பட வேண்டும். அதுவே முறையான கல்வி அமைப்பை நெறிப்படுத்த உதவும். ஏழைகளுக்கு எட்டாத இப்பயிற்சி மையங்களைத் தடை செய்யாமல் கல்வி வணிகமயமாதலைத் தடுக்க இயலாது.
தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் விளம்பரத்திற்குக் குறைவில்லை. அது வணிகமயமாதலின் குறியீடு. தனியார் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் கல்விக்கு விளம்பரம் செய்வதை அரசு தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 4 வயது முதல் 18 வயது வரை இலவச கல்வி:குழந்தைகளின் முன்பருவக் கல்வி, தொடக்கக் கல்வியின் ஒரு பகுதியாகவே அமைய வேண்டும். அக்கல்வி 4 வயதில் தொடங்குவது பொருத்தமாக அமையும், குழந்தையின் 4 வயது முதல் 18 வயது வரையிலான இலவச மற்றும் கட்டாயக்கல்விக்கு அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கல்விக் கொள்கை பின்பற்றப்பட்டு, பள்ளிக்கல்வியின் பயிற்றுமாெழியாகத் தாய்த் தமிழே அமைய வேண்டும். ஆங்கிலம் ஒரு மாெழிப்பாடமாக 6 ஆம் வகுப்பு முதல் கற்பிக்கப்படலாம்.