சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையில், 13-3-2023 மற்றும் 15-3-2023 ஆகிய நாட்களில், தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்திலுள்ள கூட்ட அரங்கில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமைத் திட்டங்கள் (Priority Schemes) தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர்கள், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை, “இன்றைய ஆய்வுக் கூட்டமானது, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மாநில மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு முக்கியமான திட்டங்களை அறிவித்து, அவற்றை நாம் செயல்படுத்தி வருகிறோம். அவற்றில் உங்களது ஈடுபாடும், பங்களிப்பும் பாராட்டுக்குரியது.
அதே சமயம், புதிய திட்டங்கள் ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை நிறைவு செய்வதில் தான் நம்முடைய திறமை இருக்கிறது. இன்றைய கூட்டத்தில் சில குறிப்பிட்ட துறைகளில், சில திட்டங்களில், பணி நிறைவு பெறுவதில் தேக்க நிலை காணப்படுவது குறித்துப் பேசி இருக்கிறோம். அதற்கான காரணங்களை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது உங்களது முக்கிய கடமையாகும். எந்தத் துறையின் திட்டமாக இருந்தாலும், அது மக்களை மேம்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
அரசின் ஒவ்வொரு துறையும் ஒரு குறிப்பிட்ட இலக்கோடு, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஏற்றத் தாழ்வற்ற வாழ்க்கை முறையை அமைப்பதற்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
இந்தத் திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்தினால், நிச்சயமாக நமது மாநிலம் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் ஒளிரக்கூடிய வகையில் அமையும். எந்தத் திட்டமாக இருந்தாலும், அந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது இருக்கிற ஆர்வம், அதனை நிறைவேற்றி முடிக்கும் வரை இருக்க வேண்டும். அதற்காக இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.