அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக தலைமையாசிரியர்கள் எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது எனக் கல்வித் துறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் இந்தாண்டு அதிகளவில் மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. தனியார் பள்ளிகளில் பணம் கட்டமுடியாத பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தலைமை ஆசிரியர்கள் பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டுள்ளன.
கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால்தான் கேட்கும் பாடப்பிரிவு தர முடியும் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர், ஒரு மாணவனின் தாயாரிடம் பேசிய கேளொலி (ஆடியோ) சமூகவலைதளத்தில் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது.
இதேபோன்று சென்னையில் இருக்கக்கூடிய ஒரு அரசுப் பள்ளியிலும், மாணவிகள் சேர்க்கைக்கு பணம் வசூலிப்பதாகப் புகார்கள் வருகின்றன. இதுபோன்று பல்வேறு இடங்களில் தொடர்ந்து புகார்கள் வருவதால் கல்வித் துறை சார்பில் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் எந்தச் சூழலிலும் அரசுப்பள்ளிகளில் அல்லது அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், மீறினால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.