மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு, தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேரும் வாய்ப்புண்டு என கல்வியாளர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்ப 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 15 விழுக்காடு வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது.
கடந்த காலத்தில், பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து வந்தார்கள். கடன் வாங்கியேனும் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தார்கள். ஏழை,எளிய, நடுத்தர மக்கள் வாழ்வில் குழந்தைகளின் கல்வி என்பது பொருளியல் சிக்கலை உருவாக்கும் ஒன்றாகவே இருந்தது.