தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வில் பூஜ்யத்திற்கும் கீழ் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் - நீட் தேர்வில்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலான மாணவர்கள் பூஜ்யத்திற்கும் கீழ் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் பூஜ்யத்திற்கும் கீழ் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்
நீட் தேர்வில் பூஜ்யத்திற்கும் கீழ் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்

By

Published : Sep 9, 2022, 1:10 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக ஆசிரியர்கள் மூலம் நேரடியாகவும், தனியார் நீட் பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆன்லைனிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதன்படி மாணவர்களும் நீட் தேர்வினை எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் செப்.7ஆம் தேதி வெளியானது.

இதில் சென்னையில் அரசுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தேர்வெழுதிய 346 மாணவர்களில் 265 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை கூட பெறவில்லை.

81 மாணவர்கள் மட்டுமே தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர், 200 மதிப்பெண்களுக்கு அதிகமாக 18 மாணவிகள் பெற்றுள்ளனர். 5 மாணவிகள் 300-க்கும் அதிகமாகவும், 13 மாணவிகள் 200-க்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். குறிப்பாக 5 பேர் பூஜ்யத்திற்கு கீழாக மதிப்பெண்களும், 2 பேர் பூஜ்யம் மதிப்பெண்களும், ஆறு பேர் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

இந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. சென்னையில் பூஜ்யத்திற்கும் கீழ் மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றிருப்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. அரசு சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, நீட் தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்படும் என்ற அடிப்படை தகவல் கூட தெரிந்திருக்கவில்லை. இதனால் பூஜ்யத்திற்கும் கீழ் மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் தகுதி நிலவரம்

நீட் தேர்வு 2016-17ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டபோது அரசுப் பள்ளி மாணவர்கள் யாரும் எழுதவில்லை. அதன்பின் 2017-18ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி 2017-18 ஆண்டில் 9,184 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,391 மாணவர்களும், 2018-19ஆம் ஆண்டில் 14,929 மாணவர்களில் 2,583 மாணவர்களும், 2019-20ஆம் கல்வியாண்டில் 6,692 மாணவர்களில் 1,633 மாணவர்களும், 2020-21ஆம் ஆண்டில் 10,853 மாணவர்களில் 2,675 மாணவர்களும் தகுதிப் பெற்றனர்.

இதையும் படிங்க:"நீட் தோல்வியா? பயம் வேண்டாம்" - ஆளுநர் அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details