7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாமல் திரும்பச் சென்ற மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலத்தில் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், "7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பு படிப்பதற்கான ஆணை பெற்றவர்கள் சிலருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சிலருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் கிடைத்துள்ளது. 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரக்கூடிய அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்புக்கு முன் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கல்வித் தொகை காரணமாக கல்லூரியைத் சேர்ந்தெடுக்காத மாணவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மாணவர்கள் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்துகோரிக்கை வைத்தனர்.