தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள் சென்னை:அம்பத்தூர் 7வது மண்டலத்திற்கு உட்பட்ட கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 4ஆம் வகுப்பு மாணவர்கள், பள்ளியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்கின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
சென்னை கொளத்தூரை அடுத்த கொரட்டூரில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே, அண்மையில் பெய்த மழையில் இந்தப் பள்ளியின் மேற்கூரையில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில் மழை நீர் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள குடிநீர் தொட்டியை 4ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் மின் கம்பிகள் அருகில், அச்சம் இல்லாமல் தடுப்புச் சுவர் இல்லாத மொட்டை மாடி மீது நின்று சுத்தம் செய்துள்ளனர். மேலும், தண்ணீர் தொட்டியை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்யக் கூறியதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மேற்கூரையில் அமைந்திருக்கும் குடிநீர் தொட்டியை பாதுகாப்பற்ற முறையில் 4ஆம் வகுப்பு மாணவர்கள் சுத்தம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:எண்ணூர் கச்சா எண்ணெய் கழிவு கசிவு விவகாரம்; புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு.. தனியார் குழு ஆய்வு!