சென்னை:நீட் தேர்வு வருவதற்கு முன்னர் அரசுப் பள்ளியில் படித்து எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கத்தில் இருந்தது.
நீட் தேர்வு அறிமுகம் செய்த பின்னர் மூன்று ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் 336 அரசுப்பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கு முன்னர் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது.
நீட் தேர்விற்கு முன் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரம்
- 2014-15ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் 26 பேரும், தனியார் மருத்துவக்கல்லூரியில் 12 பேரும் என 38 பேர் சேர்ந்துள்ளனர்.
- 2015-16ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 33 பேர், தனியார் கல்லூரியில் 3 பேர் என மொத்தம் 36 பேர் சேர்ந்துள்ளனர்.
- 2016-17ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 31 பேர், தனியார் மருத்துவக் கல்லூரியில் 3 பேர் என மொத்தம் 34 பேர் சேர்ந்துள்ளனர்.
நீட் தேர்விற்கு பின் மாணவர் சேர்க்கை
2017ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை எம்.பி.பி.எஸ் படிப்பில் மிகவும் சரிந்தது.
- 2017-18ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் ஒருவரும் சேரவில்லை. தனியார் கல்லூரியில் 3 பேர் சேர்ந்துள்ளனர்.
- 2018-19ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 4 பேரும், தனியார் கல்லூரியில் ஒருவரும் சேர்ந்தனர்.
- 2019-20ஆம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரியில் 5 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒருவரும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தனர்.
2020-21ஆம் கல்வியாண்டில் பொது ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் 10 மாணவர்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவரும் சேர்ந்தனர்.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 விழுக்காடு முன்னுரிமை இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் 239 மாணவர்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 97 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 2018ஆம் ஆண்டு முதல் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் எம்.பி.பி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:செப்டம்பரில் நீட் தேர்வு: தேதி அறிவிப்பு எப்போது?