கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் அக்டோபர் மாதம் 31 வரை நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இந்நிலையில் இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.9.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.10.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பாக கீழ்க்கண்ட பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது:
1) அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
2) திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
3) தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.
மேலும், 29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் 1.10.2020 முதல், அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
கரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது. இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.