சென்னையில் உள்ள நடைபாதை அல்லது சாலையோர வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நேற்று (நவ. 13) நடைபெற்றது. உணவு பாதுகாப்புத் துறையின்கீழ் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் தேர்வுசெய்யப்பட்டு, அவர்களுக்கு உணவை பாதுகாப்பான வகையில் சமைப்பது, தூய்மையைப் பராமரிப்பது, குப்பையை, மக்கும் குப்பை மக்காத குப்பை எனத் தரம் பிரித்து மாநகராட்சி வாயிலாக வெளியேற்றுவது, முகக் கவசம் அணிவதன் அவசியம், முறையாகக் கை கழுவுவது உள்ளிட்டவைக் குறித்து காணொலி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அவர்களிடம் கரோனா தடுப்பு ஸ்டிக்கர்கள், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறை, உணவு பாதுகாப்புத் துறையின் முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இத்துடன், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட கடன் உதவி திட்டம் (PMSVANidhi) தொடர்பான தகவல்களையும் சென்னை மாநகராட்சி பகிர்ந்து உள்ளது.