சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 2ஆயிரத்து 381 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் அருகில் செயல்பட்ட அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனை நடப்பாண்டு முதல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆங்கில வழிக்கல்வி அளிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடரந்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால், அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி அறிவித்தார். ஆனால், நடப்பாண்டில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது.
எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. அரசுப்பள்ளிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள மழலையர் வகுப்பிற்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தாலும், அதற்கான பணிகள் தொடங்கவில்லை.
இந்நிலையில் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், '2ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் பணிகளை தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பணி மாறுதல் வழங்கப்பட்டு கற்பிக்கப்பட்டது.
கரோனா தாெற்று குறைந்தபின்னர் 2021ஆம் மே மாதத்திற்கு பின்னர் அரசுப்பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். இதனால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் பணியிட மாற்றத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அங்கன்வாடி பணியாளர்கள் கொண்டு மாணவர் சேர்க்கை: 2ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் நடப்பு கல்வியாண்டில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும். ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2ஆயிரத்து 381 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரையில், அங்கன்வாடிகளில் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் கொண்டு சேர்க்கைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
3 வயதிற்கு மேல் எல்கேஜியிலும், 4 வயதிற்கு மேல் யூகேஜியிலும் சேர்த்திட வேண்டும். பிற குழந்தைகள் அங்கன்வாடி மையக் குழந்தைகளாக அந்தப் பணியாளர்களால் பராமரிக்கப்பட வேண்டும். அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க அளிக்கப்பட்டுள்ள வளங்களைக் கொண்டு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வர வேண்டும். அங்கன்வாடி மையங்கள் செயல்படும் நேரங்களில் மட்டுமே எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்படும். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு முழுவதும் தொடக்க , நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களையே சேரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு - பணியில் இல்லாத ஆசிரியர் மீது நடவடிக்கை