சென்னை: பள்ளிக்கல்வித்துறை ஆணையர், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் மாவட்டக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "இன்றைய மாணவர்களே நாட்டின் எதிர்கால தூண்கள் மாணவர்களின் வகுப்பறை சூழல் சுமையானதாக இல்லாமல், இனிமை உடையதாகவும், ஒவ்வொரு நாளும் என்ன புதுமை வகுப்பறையில் நிகழ உள்ளதோ? என்ற எதிர்பார்ப்பில் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருவதற்கும், எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் அதற்குண்டான பயிற்சிகள், படிப்புடன் கூடிய செயல்பாடாக ஒவ்வொரு பள்ளியிலும் அமைவது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இந்தகைய மகிழ்ச்சியான வகுப்பறை சூழலை அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு, சத்துள்ள காலை உணவு, மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், கம்பளி சட்டை, மழைக்கால ஆடை மற்றும் பேருந்து பயண அட்டை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகின்றது.
மேலும், எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கற்றல் நிலைக்கேற்ப மாணவர்களை மையப்படுத்திய கற்றல் கற்பித்தல் அணுகுமுறையோடு, எண்ணும் எழுத்தும் இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. கற்றல் இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க கலைத் திருவிழா, கலையரங்கம் மற்றும் பல்வேறு மன்ற செயல்பாடுகள் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.
இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலும், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே, 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.