சென்னை:தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பார்த்தசாரதி 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பதவி ஏற்றார். அதனைத்தொடர்ந்து நேற்று (ஜூன் 2ஆம் தேதி) துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அவர் பணி ஓய்வு பெற்றார்.
தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராக உள்ள ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்குப் பதில், வேந்தராக தமிழ்நாடு முதலமைச்சர் இருப்பதற்கும், துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கும் வகையிலும், சட்டமசோதாக்களில் திருத்தம்செய்யப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த மாதம் நடைபெற்ற மானியக்கோரிக்கையின்போது, சென்னை பல்கலைக் கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வித்துறையின்கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாற்றி சட்டமசாேதா நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள பிறப் பல்கலைக் கழகங்களிலும் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து மாற்றம் செய்யவும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூன் 02) ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.