தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை வழங்க அரசாணை வெளியீடு

தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியாகியுள்ளது.

அரசாணை
அரசாணை

By

Published : Sep 1, 2021, 10:37 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய தீர்ப்பினை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தினை பெற்று அரசு விரிவாக ஆய்வு செய்தது.

அதன்படி, 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

(1) ஒன்றாம் வகுப்பு முதல் , தொடர்புடைய பணி விதிகளில் நேரடி நியமன முறைக்கென வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் (10, 12 ஆம் வகுப்புகள், பட்டயம், இளங்கலை, முதுகலைப் பட்டங்கள்) முழுவதுமாக தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர்.

(2) இதர மொழிகளை பயிற்று மொழியாக (Medium of Instruction) கொண்டு பயின்று , தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

(3) 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக 10 ஆம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் மற்றும் பிற மாநிலங்களில், தமிழ் அல்லாமல் இதர மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பின்பு இம்மாநிலத்தில் நேரடியாகச் சேரும் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புகள் வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் இம்முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

அரசாணை

(4) கல்வித் தகுதி சான்றிதழ் , மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட தெரிவு முகமைகள், நியமன அலுவலர்கள் (Recruiting Agencies, Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.

(5) விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களின் உண்மைத் தன்மையினை சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் பணியாளர் தெரிவு முகமைகள் நியமன அலுவலர்கள் (Recruiting Agencies, Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.

(6) தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை உறுதி செய்ய இயலாத நிலையில் , தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை, இணைப்புகள் 1 மற்றும் 11 இல் உள்ள படிவங்களில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

(7) பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில் , சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், உரிய அலுவலரிடமிருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

(8) தொடக்க நிலை ( 5 ஆம் வகுப்பு ), உயர்நிலை ( 10 ஆம் வகுப்பு), மேல்நிலை வகுப்பு ( 12 ஆம் வகுப்பு ), பட்டயம் (Diploma), இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் ஆகிய கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களில் (Transfer Certificate) மாணவர்களின் பயிற்று மொழி (தமிழ், ஆங்கிலம், இதர மொழிகள்) கட்டாயம் குறிப்பிடப்படும். தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளால் வெளியிடப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details