சென்னை:கடந்த மே 7 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110 ன் கீழ், “அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். இதன் முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘இத்திட்டத்தின் முதற்கட்டமாக 2022 2023 ஆம் கல்வியாண்டில் காலை உணவு திட்டம் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைவாழ் கிராமங்களில் உள்ள 1,545 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு ரூ.33.56 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விகிதம்: காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அரிசி அல்லது ரவை அல்லது உள்ளூரில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்ககூடிய காய்கறிகள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.