சென்னை: அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருமளவில் நியமனம் பெற ஏதுவாக, மாநிலத்தின் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித்தாள் கட்டாயமாக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளினை கட்டாயத்தாளாக இணைத்து, அதற்கேற்ப அறிவிக்கைகளை வெளியிட்டு தெரிவு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களின் பெற்றோர் சங்கத்தின் சார்பில் தெரிவு முகமைக்கு மனு அளிக்கப்பட்டது. அதில், “காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்க சிரமப்படுவார்கள். அதேநேரம், இவர்களில் சிலர் முன்பருவபள்ளி முதல் பட்டப்படிப்பு வரை முழுமையாக ஆங்கில வழிக் கல்வியில் மட்டுமே கல்வி கற்றிருப்பார்கள்.
எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தொகுதி - IV பதவிகளுக்கான போட்டித் தேர்வில் இத்தேர்வர்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கென தனியாக பொது ஆங்கில தாளினை நடத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தனர்.