காரைக்காலில் அதிகரிக்கும் வயிற்றுப்போக்கால் பொது அவசரநிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக வாந்தியும், வயிற்றுப்போக்கும் அதிகரித்து வந்தது. அதன்படி, புதுச்சேரி பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் நேற்று (ஜூலை 03) மாலை 4 மணியளவில் ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் A.M.H. நாஜீம் மற்றும் P.R. சிவா, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்காலில் அதிகரிக்கும் வயிற்றுப்போக்கு - விளக்கம் அளித்த அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பின்னர், இது குறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், 'காரைக்காலில் குடி தண்ணீர் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீரில் கழிவு நீர் கலந்ததாலும் சுகாதாரமற்ற குடி தண்ணீரை பருகியதாலும் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகின்றது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் காரைக்கால் நலவழித்துறை எடுத்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை யாரும் வயிற்றுப்போக்கால் இறக்கவில்லை.
சில இணை நோய் உள்ளவர்கள் இருவர் இறந்துள்ளனர். ஆனால், ஒரு சிலர் வயிற்றுப்போக்கால் இறந்துள்ளதாக ஊடகம் வழியாக செய்திகளை பரப்புவதாக அறிகிறோம். ஆகையால், பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். இது வரை வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர்.
தற்சமயம் வயிற்றுப்போக்கால பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. அவர்களும் நல்ல நிலைபாடுடன் உள்ளனர். ஏற்கெனவே இறந்த இருவர் வயிற்றுப்போக்கால் இறக்கவில்லை. அதுவும் இப்போது நடந்த நிகழ்வல்ல. ஆகையால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. வயிற்றுப்போக்கிற்கான சிகிச்சை சிறந்தமுறையில் மருத்துவமனையில் நடைபெற்று வருகின்றது. ஆகையால் சில ஊடகங்கள் முகநூல்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.
கண்டிப்பாக அனைவரும் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கவும்; சுத்தமான உணவுப்பொருள்களை எடுத்துக்கொள்ளவும். வெகுவிரைவில் இந்த வயிற்றுப்போக்கு காரைக்கால் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்படும்.
பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துடனும் நல்வழித்துறையுடனும் ஒத்துழைக்கும்படியும் வயிற்றுப்போக்கு வழிகாட்டுதல் விழிப்புணர்வை கடைபிடிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்' எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கடலுக்குள் சென்று மீனவருடன் கலந்துரையாடிய எம்.பி., கனிமொழி