சென்னை: தலைமைச்செயலகத்தில் இன்று நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 2022ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்து, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்ற 28 மாணவ, மாணவியர்களை முதலமைச்சர் நேரில் பாராட்டி வாழ்த்தினார்.
மேலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள் அளித்து அவர்களை ஊக்குவிக்கிறது எனவும்; இங்கு படிக்கும் மாணவர்கள், தங்களின் திறமையை இந்திய அளவில் வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மாநில மருத்துவப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள், திறமையாகப் படித்து, அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர் என்பதாலேயே தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருவதோடு, அதனை ரத்து செய்யவும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.
அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிறந்தவர்கள் என்பதை பறைசாற்றும் விதமாக, மருத்துவப்படிப்பில் சிறந்து விளங்கி மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் பெற்ற சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை-ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி, சேலம்-அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி, உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 28 மாணவ, மாணவியர்களை முதலமைச்சர் பாராட்டி வாழ்த்தினார்.