ரியல் எஸ்டேட் துறை கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சவால்களை சந்தித்துவருகிறது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதிலிருந்தே வீடு, மனை விற்பனை சரிவு கண்டுள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.
கரோனா தொற்று பாதிப்பால் எதிர்பாராத மிகப்பெரிய சரிவை பொருளாதாரம் கண்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கு உதவும் வகையில், பத்திரப் பதிவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, கடந்த மாதம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ரியல் எஸ்டேட் துறையினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ரியல் எஸ்டேட் வணிகத்தை ஊக்குவிக்க அரசு முத்திரைத் தாள் வரி, பதிவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், இதனால் அரசுக்கு வரி இழப்பு ஏற்படாது, மாறாக கூடுதலாக வரி வசூலாகும் என தெரிவித்துள்ளோம் என தமிழ்நாடு கிரடாய் தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் வரியைக் குறைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்திவருகிறோம். கரோனா தொற்றால் பாதிப்பைச் சந்தித்துள்ள ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவும் வகையில் இது அமையும். இதன்மூலம் வாடிக்கையாளர்களும் பெருமளவில் பயன்பெறுவர். இதுகுறித்து பரிசீலிப்பதாக தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.