தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவுநேர ஊரடங்கிற்கான ஆணையை பிறப்பித்த தமிழ்நாடு அரசு - Government of Tamil Nadu issues order

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான ஆணையை தற்போது பிறப்பித்துள்ளது.

Government of Tamil Nadu issues order for night curfew
Government of Tamil Nadu issues order for night curfew

By

Published : Apr 19, 2021, 5:20 PM IST

இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆணையில்,

  • மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது , தனியார்/பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ , டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
  • தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் ( இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை ) செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.
  • மாநிலங்களுக்கு இடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகளின் போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். எனினும் , அவசர மருத்துவத் தேவைகளுக்கும் , விமானநிலையம் / இரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும் , அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் , மருந்தகங்கள் , ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் , சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
  • ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.
  • பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் , இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும் , தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு

  • மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
  • அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள் , சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் , மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் , போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் , அனைத்து சரக்கு வாகனங்கள் , விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் , எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
  • முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் , உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் , நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விகி, செமோட்டா போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது.
  • மற்ற மின் வணிக நிறுவனங்களின் வேலைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை.
  • ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம் .
  • தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
  • முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் , திருமணம் அல்லது திருமணம் சார்ந்த நிகழ்வுகள் ( கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல் ) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு ( கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல் ) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.
  • நீலகிரி மாவட்டம் , கொடைக்கானல் , ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு , உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது . தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
  • பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி , தேநீர் கடைகள் , உணவு விடுதிகள் , காய்கறி கடைகள் , பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும் , வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ( நகை , ஜவுளி ) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் , இரவு 9.00 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே குடமுழுக்கு அல்லது திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் / இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு , உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
  • கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு அல்லது திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
  • 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும் , மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details