சென்னை: தமிழ்நாட்டில் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. தமிழ்நாடு அரசு நோய்த்தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் விழுக்காடு நாட்டிலே அதிகமாக உள்ளது.
மேலும், தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக உள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தினை கருத்தில் கொண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும் நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வணிக வளாகங்களும் நாளை (அக் 21) முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன". இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:காவலர் வீரவணக்க நாள்! - 144 குண்டுகள் முழங்க மரியாதை