சென்னை: அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த கோகிலா, மாநில மனித உரிமை ஆணையத்தில் மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில், "கடந்த 2019ஆம் ஆண்டு பிரசவத்துக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பின் போது சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தையல் முறையாக போடாததால் தொடர்ந்து உடல் உபாதையை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். எனவே, தவறு செய்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில், 2020ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையத்தில் மனுதாரர் புகார் அளித்த நிலையில் ஓராண்டு 7 மாதங்கள் கழித்து மனுதாரரின் மருத்துவ ரீதியான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. பிரசவத்தின் போது மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் மிக சிக்கலான பிரச்சினையை மனுதாரர் சந்தித்து உள்ளார்.