சென்னை:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (ஏப். 7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய ஏஐசிடியு மாநிலச் செயலாளர் மூர்த்தி, "அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்" எனக் கூறினர்.
திமுக ஆட்சி அமைந்த பின்னரும் உழைப்பு சுரண்டல்:சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் சாந்தி கூறும்போது, "அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தகுந்த ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்டவற்றை அரசு வழங்க வேண்டும். மேலும் கடந்த 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது வெளியிடப்பட்ட அரசாணை நிறைவேற்றவேண்டும்.
சென்னையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்பிக்கை: நாள்தோறும் எட்டு மணி நேரம் வேலை மட்டுமே வழங்க வேண்டும். அவர்களுக்கு வார விடுமுறை, அரசு விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும். மருத்துவ விடுப்பு உள்ளிட்டவற்றை வழங்குவதுடன் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு அவர்களையும் பணியாளர்களாக கருத வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சி அமைந்த பின்னரும் உழைப்பு சுரண்டல் குறித்து அமைச்சரிடம் கூறியுள்ளோம். ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் இவர்களின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதா எனத் தெரியவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்" என நம்புவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னை புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்