சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி கொண்டாப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.