சென்னை:கடலூர் மாவட்டம் சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சியில் அரசிற்குச் சொந்தமான 186 ஏக்கர் தரிசு நிலத்தை, எந்த ஆவணங்களும் இல்லாமல், தனி நபர்களுக்கு பட்டா பதிவு செய்து கொடுத்துள்ளதாகக் கூறி, சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தெய்வானை சிங்காரவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பட்டா வழங்கி உத்தரவு பிறப்பித்த கடலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதனை அடுத்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஆஜரானார். அப்போது, மனுதாரர் தரப்பில், தரிசு நிலம், வனப்பகுதி, கிராம நத்தம், நீர் நிலை ஆகிய நிலங்கள் நில நிர்வாக ஆணையரின் அனுமதி இல்லாமல், பட்டா நிலமாக மாற்றி, தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினர், திரைப்பட இயக்குநர் ஆகியோரின் உறவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலங்களில் சட்ட விரோதமாக முந்திரி ஆலைகள் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அரசுத் தரப்பில், மனுதாரர் ஒரு குறிப்பிட்ட நிலத்தை சுட்டிக்காட்டிவிட்டு, வேறொரு நிலத்தை முன்வைத்து வாதங்களை முன்வைப்பதாகவும், குறிப்பிட்ட நிலத்தை அளவீடு செய்யவும், ஆக்கிரமிப்பு இருந்தால் நடவடிக்கை எடுக்க தாசில்தார் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், பட்டாவை ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மக்கள் வரி பணத்திலிருந்து சம்பளம் பெறும் அரசு ஊழியராக இருக்கக்கூடிய ஆர்.டி.ஓ. பொதுப்பணியை செய்ய வேண்டுமே தவிர, கட்சி ஊழியராக செயல்படக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதி, கட்சி சார்ந்து செயல்பட்டால், அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் எப்போதும் முழு அர்ப்பணிப்புடனும், பொது நலனுடனும் பணியாற்ற வேண்டியது அவர்களின் கடமை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.