தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போராட்டக் களத்தில் குதிக்க தயாராகும் அரசு ஊழியர்கள் - இடைநிலை ஆசிரியர்களுக்கான சமவேலைக்கு சம ஊதியம்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து போராடிய 60க்கும் அதிகமான சங்கங்கள் இணைந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பும், போராட்டக் களத்தில் குதிக்க உள்ளது.

ஜாக்டோ- ஜியோ சார்பில் போராட்டக் களத்தில் குதிக்க தயாராகும் அரசு ஊழியர்கள்
ஜாக்டோ- ஜியோ சார்பில் போராட்டக் களத்தில் குதிக்க தயாராகும் அரசு ஊழியர்கள்

By

Published : Dec 22, 2022, 10:18 PM IST

ஜாக்டோ- ஜியோ சார்பில் போராட்டக் களத்தில் குதிக்க தயாராகும் அரசு ஊழியர்கள்

சென்னை:அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி நிலுவைத் தொகையை வழங்காமல் இருப்பது, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்காமல் இருப்பது உள்ளிட்டப் பல்வேறு முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து, ஜாக்டோ ஜியோ தொடர் போராட்டங்களை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான உயர்மட்டக்குழு கூட்டம் வரும் 26ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சமவேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் 27ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது திமுக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்ந்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் , பகுதிநேரம் ஆசிரியர்கள் பணியினை நிரந்தரம் செய்வோம், சிறப்பு ஆசிரியர்கள் பணியினை நிரந்தரம் செய்வோம் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.

ஆனால், தற்போது வரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாத நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பஞ்சப்படி என்படும் டி.ஏ நிலுவைத் தொகை கூட வழங்காமல் இருப்பதால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பில் ஏற்கெனவே கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். 2009ஆம் ஆண்டிற்கு ஜூன் மாதம் 1ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் ஒரு விதமாகவும், அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு வகையான சம்பளமும் வழங்கப்படுகிறது என்பன போன்ற பிரச்னைகளை முன்வைத்தும், அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இந்த அமைப்பினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை கடந்த காலத்தில் நடத்தினர்.

அப்போது அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என அப்போதைய எதிர்க்கட்சித்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று வலியுறுத்தினார். இதனால் மிகப்பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும்போது, ’2009 ஜூன் 1ஆம் தேதிக்குப் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கும், அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள ஊதிய விகிதத்தை களைய வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேறாத நிலையில், வரும் 27ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்’ என அறிவித்துள்ளார்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து போராடிய 60-க்கும் அதிகமான சங்கங்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பும், போராட்டக் களத்தில் குதிக்க உள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டத்திற்கான ஆயுத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பும் போராட்டக் களத்தில் குதிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 26ஆம் தேதி சென்னையில் நடைபெறும் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க:காப்புக்காடுகள் அருகே குவாரிகள் செயல்பட்டால் அவை மூடப்படும்: அமைச்சர் மெய்யநாதன்

ABOUT THE AUTHOR

...view details