தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அப்போ ஒரு பேச்சு.. இப்போ ஒரு பேச்சா..?- கேள்வி கேட்கும் அரசு ஊழியர்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசு ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நிதியமைச்சரின் பேச்சால் அரசிற்கு எதிராக கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!
நிதியமைச்சரின் பேச்சால் அரசிற்கு எதிராக கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!

By

Published : May 10, 2022, 5:35 PM IST

Updated : May 10, 2022, 6:12 PM IST

சென்னை :திமுகவின் 3 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் , பழைய ஓய்வூதியத்திட்டத்தை அனைவருக்கும் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்திற்கு எதிராக காெந்தளிக்க துவங்கி உள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் அரசு ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் 11ம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள உள்ளனர்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்காக ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த கோரிக்கை திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் திமுக சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தது. மேலும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி மாெழி அளித்தார். மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசும்போதும், தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும், நிதிநிலை சீரமைந்தப் பின்னர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.

கடந்த 7ஆம் தேதி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு பழைய ஓய்வூதிய திட்டதை எதிர்பார்த்துள்ள அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.

நிதியமைச்சரின் பேச்சால் அரசிற்கு எதிராக கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!
இது குறித்து ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறும்போது, “திமுக ஆட்சியின் ஒராண்டு நிறைவு பெறும் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறியதற்கு நேர்மறையாக, சனிக்கிழமை மாலையில் , பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு சாத்தியமில்லை என பல்வேறு கணக்கு வழக்குகளை கூறினார். பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நபர் ஒன்றுக்கு செலவு கணக்கை கூறுவதாகவும், ஊழியர் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் இருந்ததே கண்டனத்திற்குரியது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஊழியர்களுக்கான ஊதியக் கணக்கையும் பார்த்து கூறினார். தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியில் பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தான் 3 சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குறுதி அளித்து வந்தது. இந்தமுறை தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமானது. கூடுதல் செலவாகும் என்றாலும், புதிய ஓய்வூதியத்திட்டத்தில், பங்களிப்புத் தொகை தனியாருக்கு செல்கிறது. அந்தத் தொகையை சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். அரசு என்பது லாப நட்டம் கணக்கு பார்க்கும் தனியார் கம்பெனி அல்ல. அதனை நிதியமைச்சர் புரிந்துக் கொள்ள வேண்டும். பழயை ஓய்வூதிய திட்டத்தில் மாதம் தோறும் அரசிற்கு செலவு இல்லை. ஆனால் புதிய ஓய்வூதியத்திட்டத்தில் மாதம் தோறும் செலவாகிறது. 2004 ம் ஆண்டில் துவக்கப்பட்ட புதிய திட்டம் 18 ஆண்டுகள் கடந்தப் பின்னரும் யாருக்கும் ஒய்வூதியம் அளிக்கப்படவில்லை. 18 ஆண்டுகளில் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் செட்டில்மென்ட் திட்டத்திட்டத்தில் தான் வழங்கி உள்ளனர். முதலமைச்சர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்துவார். நிதியமைைச்சர் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது வன்மமான போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்” என தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக்ரெய்மாண்ட் கூறும்போது, “தமிழ்நாடு அரசு ஒராண்டை நிறைவு செய்துள்ளதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் அரசின் கொள்கைக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துகளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியோடு பார்க்கின்றனர். கடந்த காலத்தில் ஜாக்டோ ஜியோ போராடிய போது, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் எனவும் பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வரப்படும் என இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் .

சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்னிலையே பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த இயலாது என நிதியமைச்சர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான் சார்ந்த கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு நிதியமைச்சர் எதிராக பேசி வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்துச் செய்துள்ளது. மத்திய ஒழுங்காற்று மையத்தில் ஊழியர்களின் பங்களிப்புத் தொகையை முதலீடு செய்துள்ளது. அதையும் அந்த அரசு சரி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மத்திய ஒழுங்காற்று மையத்தில் முதலீடு செய்யாமல் இருக்கும் போது ஆந்திரா அரசுடன் ஒப்பிட்டு பேசுவது எந்த விதத்தில் நியாயமானது. தமிழ்நாட்டில் எந்த நிதியும் மத்திய ஒழுங்காற்று மையத்தில் முதலீடு செய்யப்படாத நிலையில், நிதியமைச்சர் தெரிவித்த கருத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். சட்டமன்றத்தில் தொடர்ந்து நிதியமைச்சர் பேசுவதை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்கள் கண்டிக்கிறது. தேர்தல் அறிக்கையில் கூறியது படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்” என கூறினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு கூறும்போது, “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வாழ்வாதாரக் கோரிக்கையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பழைய ஒய்வூதியத்திட்டம் வழங்குவதற்கான சாத்தியக்கூறே கிடையாது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு தற்பொழுது திராவிட மாடல் பொருளாதாரக் கொள்கை என கூறுகின்றனர் அதனை வரவேற்கிறோம்.

ஆனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கையை திணிப்பதை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பங்களிப்பு ஒய்வூதியத்திட்டத்தில் 25 ஆயிரம் பேர் ஒய்வூபெற்றுள்ளனர். இவர்களில் ஒருவருக்கும் பென்சன் வழங்காத அரசு, 20 ரூபாய் பத்திரத்தில் நான் பென்சன் கேட்கமாட்டேன் என எழுதி வாங்குகின்றனர். இது தான் திராவிட பொருளாதாரமா? என்பது தெரியவில்லை.

எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, முதலமைச்சராக இருந்தபோதும் அரசு ஊழியர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றுவேன் என கூறினார். தமிழ்நாட்டில் பொதுவாக பிச்சைக்காரர்களுக்கான இல்லம், அநாதைகளுக்கான இல்லம் இருக்கிறது- ஆனால் தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பேச்சு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அநாதையாக்கும் வகையில் உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைபாளர்கள் கூட்டம் வரும் 11 ந் தேதி அரசு ஊழியர் சங்கத்தின் கட்டிடத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 5 கட்டப் போராட்டத்தை அறிவித்துள்ளோம். ஆகஸ்ட் மாதத்தில் கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தவும், அதன் பின்னர் வேலை நிறுத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு வராவிட்டாலும் தனியாக போராட்டத்தை நடத்தும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க :"பழைய ஓய்வூதிய திட்டமே வேண்டும்" - தமிழ்நாடு அரசு பணியாளர் கோரிக்கை!

Last Updated : May 10, 2022, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details