சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மற்றும் இந்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இணைந்து மாபெரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தியது.
இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று (மே 21) கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அதேபோல், தூய்மையான கடற்கரை மற்றும் கடற்கரை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், அமைச்சர்கள் இருவரும் கடற்கரைகளில் இருந்த குப்பைகளை சேகரித்தனர். அவர்களுடன் பள்ளி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று குப்பைகளை சேகரித்தனர். முன்னதாக, கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த மணல் சிற்பங்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தான மஞ்சப்பை கடைகளையும் பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கே நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஜி 20 மாநாட்டினை (G20) ஒட்டி உலகில் இருக்கிற 20 நாடுகளில் இன்றைக்கு கடற்பரப்புகளில் குவிந்து கிடக்கின்ற இந்த குப்பைகளை அகற்றும் பணி என்பது திட்டமாகவே நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள கடற்கரையில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாள் குப்பை எடுப்பதன் மூலம் என்ன நடக்க போகிறது என்று யாரேனும் கேள்வி கேட்கலாம். பொதுமக்களிடம் விழிப்புணர்வாக அமையும் என்பதற்காக தான் இந்த பணிகள் செய்யப்படுகிறது. குப்பைகள் கடல் வாழ்வு உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும் விதமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கடற்கரைகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நிலப்பரப்பு என்பது 1 லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கி.மீ. பரப்பளவாகும். ஒவ்வொரு நாட்டிலும் 33 ச. கி.மீ. பசுமை பரப்பு இருக்க வேண்டும் என்பது நியதி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இருக்கின்ற பசுமை பரப்பு அமைந்திருக்கின்ற பகுதி என்பது 30 ஆயிரத்து 824.22 சதுர கிலோமீட்டர் இன்னமும் 12 ஆயிரத்து 76 சதுர கிலோமீட்டர் அளவிற்கு பசுமை பரப்பை உருவாக்குவது என்பது தமிழ்நாடு அரசின் கடமை. இந்த அரசு அதை ஒரு புனித கடமையாக ஏற்று 33 பசுமை பரப்பு என்கிற நியதியை எட்டுகின்ற வகையில் கோடிக்கணக்கான மரங்களை நட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்கும், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இது போன்ற நிகழ்வு நடக்கிறது. தினமும் மற்றவர்கள் இது போன்று செய்ய வேண்டியதற்காகதான் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்றார். மேலும், தமிழ்நாட்டில் 4,308 மருத்துவ காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு எம்ஆர்பி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 3,000 மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,021 மருத்துவர்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!