சென்னை:கடந்த ஆண்டு ஊதிய உயர்வு கோரி, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த அரசு மருத்துவர்களிடம், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் மருத்துவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்தார். தற்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி அரசு மருத்துவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குறைக்கப்பட்ட தொற்று எண்ணிக்கை
இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை பேசுகையில், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபோது, கரோனா தொற்றுப் பரவல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் உறுதியான நடவடிக்கை மூலம், 36 ஆயிரமாக இருந்த தினசரி கரோனா எண்ணிக்கை, இரண்டாயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்த போதும், தொற்று ஏற்பட வாய்ப்பிருந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அர்ப்பணிப்போடு பணி செய்துவருகிறோம். தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.
முந்தைய ஆட்சியில் நியாயமான ஊதியக் கோரிக்கைக்காகப் போராடிய 118 மருத்துவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டோம். நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
மருத்துவர்கள் போராட்டத்தை ஆதரித்த ஸ்டாலின்
ஒவ்வொரு மருத்துவரும், கடந்த 10 ஆண்டுகளாக மாதந்தோறும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் வருமான இழப்புடன், கனத்த இதயத்துடன் பணிசெய்கின்றனர். அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது.
அதுவும் இதில் பெரும் பகுதியை மருத்துவர்கள் இன்சூரன்ஸ் மூலமாகவே, அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தர முடியும். கடந்த நான்கு ஆண்டுகளாக மருத்துவர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரித்து வந்துள்ளார்.
மேலும் திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354இன்படி ஊதியம் வழங்கப்படும் என ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நேரில் கூறினார்.
போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை
அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையான, பதவிக்கு ஏற்ற ஊதிய உயர்வை முழுமையாக நிறைவேற்றி, ஊதியப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354இன்படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.
கார்ப்பஸ் பண்ட் போன்ற நிறுத்திவைக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் செயற்பட அனுமதிக்க வேண்டும். கோவிட் பேரிடர் போரில் உயிர் நீத்த ஏழு அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கும் 50 லட்சம் ரூபாய் வழங்கி, அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:'நிர்வாகிகள் நியமன தடை வழக்கை அபராதத்துடன் நிராகரிங்க' - எடப்பாடி பழனிசாமி