சென்னை:தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது அரசு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துக் கொண்டு எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றித் தரப்படும் என கூறினார்.
ஆனால் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கடந்தும் மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அரசுடன் பலக் கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கை நிறைவேறாமலேயே உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் இன்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரை சந்தித்து ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து பேசியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கோரிக்கை நிறைவேறாது என தெரிந்தவுடன் இயக்குநர் அலுவலக வளாகத்திலேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களின் கோரிக்கையை ஏற்று அரசாணை 293ஐ அமுல்படுத்தினால் மட்டுமே செல்வோம் என கூறியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாவின் பதவியேற்ற உடன் வழங்கப்பட்ட அரசாணை 293 குறித்து சங்கங்களிடையே இரு வேறு கருத்து இருந்ததால், இது குறித்து அனைத்து சங்கங்களையும் கூட்டி மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் சிலர் எதிர்க்கின்றனர் என்பதற்காக அரசாணையை அமல்படுத்தாமல் இருக்க கூடாது.