சென்னை:அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,
கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு எம்டி, எம்எஸ் முதுகலை மருத்துவப்படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் 30 விழுக்காடு ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என கடந்த 2021 அக்டோபர் மாதம் அரசு உத்தரவிட்டது.
முதுகலை மருத்துவப் படிப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் 1,968 இடங்கள் உள்ளன. இதில் 50 விழுக்காடு அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும் என்றும் மீதம் 969 இடங்கள் உள்ளதாகவும், அதில் 50 விழுக்காடு அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊக்க மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்குவதால் மீதமுள்ள 50 விழுக்காடு இடங்களும் அரசு மருத்துவர்களுக்கே சென்றடைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தனியார் மருத்துமனையில் படித்தவர்களுக்கு வாய்ப்பு பறிபோவதாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இதில் ஏதாவது ஒன்றைத்தான் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கின் மீதான வாதப்பிரதிவாதங்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன்பு நடைபெற்றது.