சென்னை:இவ்விவகாரம் குறித்துஅரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழுத் தலைவர் பெருமாள் பிள்ளை கூறியுள்ளதாவது, "தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு, மாநில அரசிடமிருந்து நிவாரணம் எதுவும் தரப்படமாட்டாது என்று சுகாதாரத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. மருத்துவர் விவேகானந்தன் உயிரிழந்து ஓராண்டுக்குப் பிறகும், அவரது மனைவிக்கு அரசு வேலை தரப்படவில்லை.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக்கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற ஏக்கத்தோடும், எதிர்பார்ப்போடும் நாங்கள் காத்திருந்தோம். இருப்பினும் ஆட்சி அமைந்து 10 மாதங்களுக்குப் பிறகும், அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வலியும், வேதனையும் ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே இருக்கிறது.
மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்க வேண்டும்
கடந்த ஆட்சியில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது மருத்துவர்கள் தங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். அடுத்து அமையும் நம் ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அவரின் வார்த்தைகள் ஏதோ உதட்டில் இருந்து வந்ததாகத் தெரியவில்லை. முதலமைச்சரின் உள்ளத்தில் இருந்து வந்ததாகவே தெரிந்தது. இருப்பினும் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இது மக்களுக்கான அரசு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கான அரசும் தான் என முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால் இங்கு எத்தனையோ வலிகளுடனும், வேதனைகளுடனும் இருக்கும் அரசு மருத்துவர்களின் மீது முதலமைச்சரின் பார்வை விழவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.