தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கேபிள் டிவி விவகாரம்: நடப்பது என்ன? - அண்ணாமலை

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அரசு கேபிள் சரிவர சேவை வழங்காததால் சந்தாதாரர்கள் வேறு கேபிள் சேவைக்கு மாறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. மென்பொருள் பராமரித்து வரும் நிறுவனத்தின் தொழில்நுட்பக்குறைபாடு காரணத்தால் சேவை பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டநிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கேபிள் டிவி விவகாரம்: நடப்பது என்ன..?
அரசு கேபிள் டிவி விவகாரம்: நடப்பது என்ன..?

By

Published : Nov 23, 2022, 4:11 PM IST

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் சேவை மென்பொருள் செயலிழந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக சேவை பாதிக்கப்பட்டிருந்தது. அரசு கேபிள் சேவை மென்பொருள் பராமரித்து வரும் நிறுவனம் மூலம் சட்ட விரோதமாக செயலிழக்கச்செய்யப்பட்டதால், சேவை தடைபட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மென்பொருள் பராமரிப்பு நிறுவனத்திற்கு அரசு தரப்பில், வழங்க வேண்டிய கட்டணத்தை சரிவர செலுத்தாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் அரசு கேபிள் சந்தாதாரர்கள் 5 லட்சம் பேர் வேறு கேபிள் நிறுவனத்திற்கு மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மேலும் திமுக அரசின் சுயநலம் காரணமாக அரசு கேபிள் சேவை முடக்கப்பட்டிருப்பதாகவும், மென்பொருள் பராமரிப்பு நிறுவனத்திற்கு கட்டணப் பாக்கி இருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசு கேபிள் சேவையைப்பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களுக்கு சரிவர சேவை வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் பல சந்தாதாரர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறி வந்தனர். இந்நிலையில் திடீரென்று கேபிள் சேவை முற்றிலுமாக தடைபட்டதால் சந்தாதாரர்கள் என்ன செய்வதென்று செய்வதறியாது திகைத்திருந்தனர்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதன்பின் அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு நிலைகுறித்து தெரிவித்தது.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டின் நலன்களும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களும் புறக்கணிக்கப்படுவதும், தன் நலமும், குடும்ப நலமும் முக்கியத்துவம் பெறுவதும் வாடிக்கை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில், தற்போதைய திமுக ஆட்சியிலும் தன்னலம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன், குறைந்த கட்டணத்தில் மக்கள் அதிக தொலைக்காட்சி சேனல்களை கண்டு களிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கேபிள் டிவி சேனல்களை பார்க்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கே பிரச்னை என்னவென்று தெரியாத சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கைபேசிகளை அணைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் சேவை திடீரென தடைபட்டதாகவும், இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்படும் என்றும், இதற்குக் காரணமான தனியார் நிறுவனத்தின்மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தனியார் நிறுவனத்திற்கான கட்டணத்தை ஓராண்டாக அரசு கேபிள் டிவி நிறுவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் அந்த நிறுவனம் மென்பொருள் வழங்கும் சேவையை நிறுத்தியுள்ளது என்றும் தகவல்கள் வருகின்றன. அதாவது, அரசு கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் என்பதும், தனியார் நிறுவனம் அல்ல என்பதும் தெளிவாகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே திறனற்ற திமுக அரசு செயல்பட்டு வருகிறது. 1.75 கோடிக்கும் அதிகமான எளிய பொதுமக்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில் தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு மக்களை வஞ்சித்து தங்களின் சுயலாபத்திற்காக மேலும் ஒரு அரசு நிறுவனத்தைக் காவு கொடுக்க துடிக்கும் இந்த திறனற்ற திமுக அரசின் அராஜகப்போக்கை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது!” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை சட்டவிரோதமாக அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த பராமரிப்பு நிறுவனத்தின் மீது குற்ற வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிர்வாகி ராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் முறையீடு ஒன்றை முன் வைத்தார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனமான காஸ்பல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டால் மத்தியஸ்தர் மூலமே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளதாகவும், ஆனால் அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்துள்ளதாக தெரிவித்தார்.

எனவே, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிபதி அவசர வழக்காக விசாரித்தார்.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், ஆஜராகி உரிய கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால், பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க வேண்டும் என்றும், அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்து மிரட்டல் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். கேபிள் சேவையை துண்டித்து இடையூறு செய்வது சட்டவிரோதம் எனவும், எனவே கேபிள் சேவையை இடையூறு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டணம் தரப்படவில்லை என்பதற்காக, கேபிள் சேவையை துண்டிக்கக் கூடாது என்றும், இதுகுறித்து மத்தியஸ்தர் மூலமாக தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களுக்குள் இது குறித்து தீர்வு காண வேண்டும் என கூறிய நீதிபதி, அரசுக்கு கேபிள் டிவி சேவையை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details