சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவில்பட்டியில் இருந்து புளியங்குளம் - லட்சுமியம்மாள்புரம் - இளையரசனேந்தல் கீழக்காலனி - இளையரசனேந்தல் வழியாக வரகனூர் வரை செல்லும் அரசு பேருந்து, சாலை பராமரிப்புப் பணி காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
சாலை பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நீண்ட நாட்களாக இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படாமல் இருந்து வந்தது. காலை 6 மணிக்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வந்த சூழலில், அது மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்காக, நான் அந்த கிராமங்களுக்கு சென்றபோது, பொதுமக்கள் இப்பிரச்னையை என் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.
பேருந்து இயக்கப்படாமல் இருந்து வருவதால் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் சென்று வர முடியாமல் பொதுமக்களும், மாணவர்களும், வயதானவர்களும் தவித்து வருவதை அறிந்தேன். இதுதொடர்பாக, கடந்த மே 9ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் அமைச்சர் உறுதியளித்தார்.