சென்னை: ஆராய்ச்சி, திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சரின் "ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்" தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு சுமார் 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் மூன்றாண்டு காலத்திற்குள் சுமார் 100 மாணவர்களுக்கு கலை, சமூக அறிவியல், மானுடவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
இதற்கான மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருடன் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதியக் கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் "ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம்" தொடங்கப்பட்டது.