சென்னை:தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் முன்பு அறிவித்திருந்தது.
அதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை நியாய விலைக் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.
இதை அடுத்து, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடப்பட்ட நிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று (ஜன.10) அறிவித்திருந்தது.