சென்னை:நொளம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட எஸ்.பி. நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சலூன் (Guys and Dolls) செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் வாடிக்கையாளர்கள் போல் சலூன் கடைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடையில் பணியாற்றி வந்த 5 பெண் ஊழியர்கள் உட்பட 7 பேரை பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
மேலும் கத்திமுனையில் அவர்களிடம் இருந்த 2.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 8 விலை உயர்ந்த செல்போன்கள், பெண் ஊழியர்கள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 சவரன் தங்க நகைகள் மற்றும் கடையில் இருந்த 7500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு முகத்தை மூடியபடி அங்கிருந்து தப்பியோடினர்.
முடித்திருத்தம் செய்யவேண்டும் எனக் கூறி வாடிக்கையாளர் போல கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்த கும்பல் தொடர்பாக கடை உரிமையாளர் அளித்தப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன், நொளம்பூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடம் மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்தனர்.