காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வையாவூா் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே நேற்று (அக்.3) சரக்கு ரயில் தடம் புரண்டது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் இருவரும், ரயில் கார்டும் உயிர் தப்பினர். காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ள நிலையில், வெளிமாநிலங்களிலிருந்து பல்வேறு தொழிற்சாலைகளுக்குத் தேவையான இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, பின்னர் ஆலைகளுக்கு அனுப்பப்படும்.
அந்த வகையில், காஞ்சிபுரம் - வையாவூர் செல்லும் சாலையில் பழைய ரயில்வே நிலையம் உள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் சரக்கு முனையம் செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு முனையத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து அவ்வப்பொழுது வரும் சரக்கு ரயில் முனையத்திற்கு வந்து நிற்கும். அப்போது சரக்கு ரயில்களிலிருந்து சரக்குகள் லாரிகள் மூலம் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும்.
இந்நிலையில், நேற்று (அக் 3) கர்நாடக மாநிலம் பெல்லாரியிலிருந்து இரும்பு தொழிற்சாலைக்கு காயில் ஏற்றி வந்த சரக்கு ரயிலானது, எதிர்பாராத விதமாக வாக்கி டாக்கி சிக்னல் கோளாறு காரணமாக ரயில் ஓட்டுநர் சரக்கு ரயிலை நிறுத்த முற்ப்பட்டபோது, சரக்கு முனையத்திலுள்ள தண்டவாளத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு வெளியேறி விபத்துக்குள்ளானது.