தமிழ்நாடு

tamil nadu

நியாயவிலைக் கடைகளில் டோக்கன் முறை - தமிழ்நாடு அரசு!

By

Published : Jun 1, 2021, 8:34 AM IST

நியாயவிலைக் கடைகளில் வரும் ஜுன் 5ஆம் தேதி முதல் டோக்கன்கள் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நியாயவிலை கடைகளில் டோக்கன் முறை
நியாயவிலை கடைகளில் டோக்கன் முறை

சென்னை: நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெற இன்று(ஜுன்.1) முதல் நான்கு நாட்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற ஜுன் 7ஆம் தேதிவரை தளர்வுகற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து இன்றியமையாதப் பொருள்கள், கரோனா நிவாரணத் தொகை உள்ளிட்ட நல உதவிகள் தொடர்ந்து பெறும் வண்ணம் நியாயவிலைக் கடைகள் தினந்தோறும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வண்ணம் ஏற்கெனவே முந்தைய மாதங்களில் கடைப்பிடித்தது போலவே வரும் ஜுன் மாதம் முதல் டோக்கன் முறையில் நியாயவிலைக் கடையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. அந்த டோக்கன்களில் நாள், நேரம் அச்சிடப்பட்டிருக்கும். அதன்படி மக்கள் தங்களது நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்களை பெற்றுச் செல்லலாம்.

மேலும் ஒரு நாளைக்கு அதிகப்பட்சம் 200 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் இன்று(ஜூன்.1) முதல் வரும் ஜுன் 4ஆம் தேதி வரை நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் பொதுமக்களின் இல்லத்திற்கு வந்து தருவார்கள்.

டோக்கன்களின் அடிப்படையில் ஜுன் 2021 மாதத்திற்கான விநியோகம் வரும் ஜுன் 5ஆம் தேதி சனிக்கிழமை முதல் நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நிர்வாக காரணங்களினால் துவரம் பருப்பு மட்டும் வரும் ஜுன் 7ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் உரிய கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும், முகக்கவசம், தகுந்த இடைவெளியினை பின்பற்றியும் தங்களையும், சமூகத்தையும் நோய்த்தொற்று அபாயத்திலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழக்கும் செய்தியாளர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details