சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளிடம் சுங்க அலுவலர்கள் சோதனை நடத்தினர். அதில் சிவகங்கையைச் சேர்ந்த இம்ரான் பாபு (37) என்பவரது உடமைகளில் ஸ்கேட்டிங் போர்டு மற்றும் கதவு தாழ்பாள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 23 லட்சம் மதிப்புள்ள 551 கிராம் தங்க கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், சென்னையைச் சேர்ந்த ஹைசுல் ஹக் (40), திருச்சியைச் சேர்ந்த சையத் காதர் பாஷா (24) இருவரின் காலணிகளிலிருந்து ரூ.20 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள 494 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் திருச்சியைச் சேர்ந்த சையத் இர்பான் (23) என்பவரிடமிருந்து ரூ. 8 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 199 கிராம் தங்கமும், சென்னையைச் சேர்ந்த முகமது தாரீக் ஷியாத் (23) என்பவரிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 191 கிராம் தங்கத்தையும் அலுவலர்கள் கைப்பற்றினார்கள்.