சென்னை: துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று(டிச.9) காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக, சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில், விமான நிலைய ஊழியர்கள் விமானத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, விமானத்தின் சீட் ஒன்று தூக்கிக்கொண்டு இருந்தது. அதை விமான நிலைய ஊழியர்கள் சரி செய்த போது, சீட்டுக்கு கீழே பார்சல் ஒன்று இருப்பது தெரிய வந்தது. உடனடியாக, விமான நிலைய மேலாளருக்குத் தகவல் தெரிவித்தனர். பின், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் மூலம் பார்சலை ஆய்வு செய்தனர். அந்த பார்சலில், பிளாஸ்டிக் பவுச்சுக்குள் தங்கப் பசை இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
பின்னர், விமான நிலைய சுங்கத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் படி, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 1.25 கிலோ எடையுள்ள தங்கப் பசையைப் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.73 லட்சம் ஆகும்.
பின்னர், சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, துபாயிலிருந்து விமானத்தின் மூலம் சென்னைக்குத் தங்க பசை பார்சலை கடத்தி வந்த நபர் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.